இஷாராவிற்கு உதவிய யாழ் ஆனந்தனின் வீட்டில் சிக்கிய பொருட்களால் அதிர்ச்சி!

 “கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்துகொடுத்து உதவியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “ஆனந்தன்” என்பவரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “ஆனந்தன்” என்பவர் வழங்கிய தகவலுக்கமைய யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன


வவுனியாவிலும் கைது

பிஸ்டல் ரக துப்பாக்கிகள் இரண்டும் 9 மி.மீ ரக தோட்டாக்கள் ஆறு உள்ளிட்ட ஆயுதங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

அத்துடன், “ஆனந்தன்” என்பவருக்கு துப்பாக்கியை கொடுத்ததாக கூறப்படும் நபரொருவரும் வவுனியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பின்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இஷாரா செவ்வந்தி வழங்கிய தகவலுக்கமைய இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்து கொடுத்து உதவிய “ஆனந்தன்” என்பவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட நிலையில் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form